"உனக்கொரு விஷயம் தெரியுமா ? வர்ற புதனுக்கு நம்ம பாட்டனி டீச்சருக்குக் கல்யாணமாம்" அன்று வகுப்பறைக்குள் நுழைந்ததும், நான் கேட்ட முதல் வாக்கியம் அதுவாகத் தான் இருந்தது. நான் அதை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு பதில் தரும் முன்னரே, இன்னொரு வாக்கியமும் அதனோடு சேர்ந்துகொண்டது. "இந்த வயசுல இவுகளுக்கு இந்தக் கல்யாணம் தேவையா !!" சொல்லிவிட்டு, வழக்கம் போல என்னிடம் கணக்கு நோட்டை வாங்கி, அன்றைய வீட்டுப் பாடத்தைப் பார்த்து எழுத ஆரம்பித்தாள் பொம்மி. நான் அவளையும், முன் பெஞ்சிலும் பின் பெஞ்சிலும் கிசுகிசுத்துக் கொண்டிருந்த சக மாணவிகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடம் கேட்டேன். "ஏய், பொம்மி. டீச்சருக்குக் கல்யாணம்னு ஒனக்கு யாரு சொன்னது ?" "யாரச் சொல்றதுக்கு ? இந்த ஸ்கூல் அம்புட்டுமே அதத்தேன் பேசிட்டுக் கெடக்கு. அவுக நம்ம பக்கத்து கிளாஸ் வில்சனுக்கு தூரத்து உறவாம். அவன் அவுகளப் பத்தி இங்கிட்டு வந்து சொல்ல, அது காத்துவாக்குல பரவி, இப்போ அம்புட்டுப் பேருக்கும் தெரியும்" "ஓ.." எனது புருவங்கள் உயர்ந்தன. "சரி, அத விடு. நீ எனக்கு இந்த ஹைப்பர்போலா பார்ம...
Posts
Showing posts from May, 2022