"உனக்கொரு விஷயம் தெரியுமா ? வர்ற புதனுக்கு நம்ம பாட்டனி டீச்சருக்குக் கல்யாணமாம்"
அன்று வகுப்பறைக்குள் நுழைந்ததும், நான் கேட்ட முதல் வாக்கியம் அதுவாகத் தான் இருந்தது. நான் அதை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு பதில் தரும் முன்னரே, இன்னொரு வாக்கியமும் அதனோடு சேர்ந்துகொண்டது.
"இந்த வயசுல இவுகளுக்கு இந்தக் கல்யாணம் தேவையா !!"
சொல்லிவிட்டு, வழக்கம் போல என்னிடம் கணக்கு நோட்டை வாங்கி, அன்றைய வீட்டுப் பாடத்தைப் பார்த்து எழுத ஆரம்பித்தாள் பொம்மி. நான் அவளையும், முன் பெஞ்சிலும் பின் பெஞ்சிலும் கிசுகிசுத்துக் கொண்டிருந்த சக மாணவிகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடம் கேட்டேன்.
"ஏய், பொம்மி. டீச்சருக்குக் கல்யாணம்னு ஒனக்கு யாரு சொன்னது ?"
"யாரச் சொல்றதுக்கு ? இந்த ஸ்கூல் அம்புட்டுமே அதத்தேன் பேசிட்டுக் கெடக்கு. அவுக நம்ம பக்கத்து கிளாஸ் வில்சனுக்கு தூரத்து உறவாம். அவன் அவுகளப் பத்தி இங்கிட்டு வந்து சொல்ல, அது காத்துவாக்குல பரவி, இப்போ அம்புட்டுப் பேருக்கும் தெரியும்"
"ஓ.."
எனது புருவங்கள் உயர்ந்தன.
"சரி, அத விடு. நீ எனக்கு இந்த ஹைப்பர்போலா பார்முலாவ சொல்லித் தா. கணக்கு டீச்சர் வேற இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட் வைப்பேன்னு சொல்லிருக்காக !!"
என்னிடம் உதவி கேட்ட பொம்மிக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக, அவள் நோட்டில் நான் எதையோ கிறுக்கினாலும், எனது கவனம் முழுவதுமே, டீச்சரைப் பற்றித்தான்.
எங்கள் பள்ளியைப் பொறுத்தவரையில், எவாஞ்சலின் டீச்சர் ரொம்பவே பிரபலம். அவரைப் பற்றித் தெரியாத அல்லது அவரைப் பற்றிப் பேசாத ஆட்களே இல்லையென்று சொல்லலாம்.
'அவர் கற்றுக்கொடுப்பதால், பாட்டனி எளிதாகிப் போனதா ? இல்லை பாட்டனி எளிது என்பதால் டீச்சர் அதை அப்படி சுவாரசியமாகக் கற்றுத் தருகிறாரா ?' , என்பதை விவாதித்தே நாங்கள் பல நாட்கள் சண்டையிட்டிருக்கிறோம்.
"எங்க எவாஞ்சலின் டீச்சர் அளவுக்கு, யாராலையும் சொல்லித் தர முடியாது தெரியுமா ? அவுக, நாங்க பாடத்துல படிக்கிற எல்லாச் செடியையும் நேர்லையே கொண்டாந்து காட்டுவாக. ஆலியம் சீப்பா, ஜட்ரோப்பா குர்காஸ், க்ளோரியோசா சூப்பர்பா - நாங்க பாக்காத தாவரங்களே இல்ல" , என்று எங்கள் பக்கத்துப் பள்ளி மாணவர்களிடம், அடிக்கடி பெருமையடித்திருக்கிறோம்.
நடந்து வரும்போதே, தலைமை ஆசிரியரின் அறைக்கு முன்னாலிருக்கும் தங்கத்தரளி மரத்தின் மஞ்சள் மொட்டுக்களை, கையை உயர்த்தி இரு விரலால் வருடிவிட்டு, கட்டியிருக்கும் கரீஷ்மா காட்டன் புடவையின் மடிப்பு கொஞ்சம் கூடக் கலையாத வண்ணம் நேர்த்தியாக, அதே சமயத்தில் வேகமாக அவர் நடப்பதைப் பல நாட்கள், எங்கள் வகுப்பு பால்கனியில் அமர்ந்திருந்த வண்ணமே நாங்கள் ரசித்திருக்கிறோம்.
ஆனால், 'பள்ளி முழுவதிலும் அவர் பிரபலம்' என்று நான் சொன்னதற்கு, இவற்றில் எதுவுமே காரணமில்லை.
எவாஞ்சலின் டீச்சரது வயது தோராயமாக நாற்பத்தைந்து. ஆனால், அவருக்குத் திருமணமாகவில்லை.
அந்த ஒன்றுதான், அவரைப் பள்ளி முழுவதிலும் ஒரு பேசுபொருளாக ஆக்கி வைத்திருந்தது. சொல்லப்போனால், அவரைப் பாராட்டிச் சொல்லுவதற்கு ஆயிரம் இருந்தும், அவற்றுள் ஏதேனும் ஒன்றால் கூட, அவரைத் தனித்துக்காட்டிய அந்தத் தனிமைக்கு முன்னால், ஈடுகொடுக்க இயலவில்லை.
பின்னே, அவரைப் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், அங்கிருக்கும் யாராவது ஒருவரேனும், "எவாஞ்சலின் டீச்சர்னா.. அந்த கல்யாணமாகாத டீச்சர் தானே !! பாவம்", என்று சொல்லாமல் இருந்ததில்லையே !!
எனக்கோ அந்த வாக்கியத்தைக் கேட்கும்போதெல்லாம் ஒரு மாதிரி வருத்தமாக இருக்கும். 'இந்த சமூகத்தில், ஒரு பெண்ணோ, ஆணோ மணமாகாமல் ஒற்றை ஆளாய் இருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா ?' , என்று தோன்றும். 'திருமணமானவர்கள் எல்லாம் என்ன சந்தோஷமாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !!', என்று கோபம் வரும்.
ஆனாலும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போதும், அந்தக் கோபங்களும் வருத்தங்களும் மறைந்து போகும். டீச்சரின் மீது ஒரு பரிதாபம் மட்டுமே எஞ்சும்.
ஆம், நாங்கள் 'ப்ளஸ் டூ' மாணவர்கள் என்பதால், ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு எங்களுக்கு ஸ்டடி நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சப்ஜெக்ட். வெள்ளிக்கிழமைகளில், தாவரவியல். அதாவது எவாஞ்சலின் டீச்சரின் ஸ்டடி டைம். அது முடிந்ததுமே, நானும் பொம்மியும் எங்கள் பள்ளியிலிருந்து கிளம்பி, அதற்கு எதிர்தாற்போலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் எங்கள் ஊருக்கான டவுண் பஸ்சுக்காகக் காத்திருப்போம்.
டீச்சர், எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் அனுப்பி முடித்துவிட்டு, வகுப்பறையைப் பூட்டி அதன் சாவியை தலைமை ஆசிரியரின் அறையில் கொண்டுபோய் மாட்டுவார். பின், தனது ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு, அந்த தங்கத்தரளி மொட்டுக்களை வருடி அவற்றிடமிருந்து விடைபெற்றுவிட்டு, பள்ளியிலிருந்து வெளியே வருவார். அதிலிருந்து இடப்புறமாக பதினைந்து அடிகள் எடுத்துவைத்தால் வரும், பங்களாத் தெருவுக்குள் நுழைவார்.
அதைப் பார்க்கும்போது, எனக்குள் ஒரு இனம்புரியாத கலக்கம் ஏற்படும்.
எல்லா வீடுகளின் கதவும், சதாகாலமும் பூட்டப்பட்டே காட்சியளிக்கும் ஆளரவமற்ற அந்தத் தெருவையும், அதில் துணையின்றி ஒற்றை ஆளாய் நடந்துசெல்லும் டீச்சரையும் பார்க்கும்போது, என் இதயம் கனத்து விடும். ஒரு பேரிருட்டின் பயம், ஒரு மௌனத்தின் தவிப்பு, ஒரு நெடிய தனிமையின் அழுத்தம் - ஆகியவை எனக்குள் ஏறி அமர்ந்து என்னை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
"ச்சே.. நம்ம டீச்சருக்கு இப்படிக் கல்யாணமே ஆகாமப் போச்சே !! எப்படித்தேன் தனியாவே காலந்தள்ளப் போறாகளோ தெரிலையலையே !!", என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.
ஆனால், அந்த வருத்த வாக்கிங்கள் கூட, 'நாற்பதைக் கடந்த ஒரு பெண்ணுக்குத் திருமணமே ஆகாது', என்ற தொனியிலும், 'நாற்பதுக்கு மேல், ஒருவருக்குத் திருமணமே தேவையில்லை', என்ற தொனியிலுமே இருந்திருக்கிறது பாருங்களேன்.
இந்த மனப்பாங்கு தானோ என்னவோ, 'பாட்டனி டீச்சருக்குக் கல்யாணம்' என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து என் மனம், குழம்போ குழம்பென்று குழம்பித் தவித்தது.
இதில் வேறு, அன்றைய தினத்தில் தோழிகளோடு கூடி உட்கார்ந்து மதிய உணவைச் சாப்பிட்ட போதும், பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஹவுஸ் மார்ச் செய்தபோதும், பாத்ரூம் க்யூவில் அடிவயிற்றை இருகப்பிடித்துக்கொண்டு கால்கடுக்க காத்திருந்த போதும், 'இந்த வயசுல டீச்சருக்குக் கல்யாணம் அவசியமா ?' , என்ற ஒரே பொருளில் அமைந்த பல மாதிரியான சொற்றொடர்கள் என் காதில் விழ, அன்றிலிருந்து என் எண்ணம் முழுவதையுமே, அந்த ஒரே கேள்வி ஆக்கிரமித்தது.
"ஏம்மா, பொதுவா எல்லாரும் எந்த வயசுல கல்யாணம் கெட்டிக்குவாக ?"
இரவு சாப்பாட்டு வேளையில், சோற்றைப் பிசைந்தபடியே என் அம்மாவிடம் கேட்டேன்.
"எதுக்கு இந்தக் கேள்வி ? ஒனக்கு இப்பவே கல்யாண ஆசை வந்துருச்சா என்ன ?"
அம்மாவின் முகம் கடுகடுத்துப் போனது.
"இல்லம்மா. எங்க பாட்டனி டீச்சருக்கு நாப்பத்தஞ்சு வயசாவுது. இந்த வாரத்துலதேன் அவுக கல்யாணமே கெட்டிக்குறாக. அதேன் கேட்டேன்"
"ம்ம்க்கூம்ம். அது ரெண்டாவது கல்யாணமாட்டுக்கு இருக்கும்"
"இல்லம்மா. இதுதேன் அவுகளுக்கு மொத கல்யாணம். இம்புட்டு நாளா ஏன் கெட்டிக்கிடலன்னு தெரியல"
"அதத் தெரிஞ்சி நீ என்னத்த செய்யப் போற ? படிக்க அனுப்புனா, ஊர்வம்பு பேசிக்கிட்டுத் திரியுரியா ஊர்வம்பு ??"
நான் அதற்கு மேல், அந்தப் பேச்சைத் தொடரவில்லை. அடுத்த நான்கு நாட்களுக்கு டீச்சர் பள்ளிக்கும் வரவில்லை. பள்ளியில், டீச்சரைப் பற்றிய பேச்சும் கூடத் தொடரவில்லை.
எல்லாம், திங்கட்கிழமையன்று எவாஞ்சலின் டீச்சர் பள்ளிக்கு வரும் வரை மட்டும் தான் !!
பின்னர், மறுபடியும் அவரது கல்யாணத்தைப் பற்றிய பேச்சு தொடர்ந்தது. அந்தப் பேச்சுக்கள் மூலம், டீச்சர் அன்றைக்கு கரும்பச்சை நிறத்தில் ஆரஞ்சு பார்டர் போட்ட பட்டுப் புடவையில் வந்திருப்பதையும், வழக்கம்போல அல்லாது அவர் தலைநிறைய முல்லைப்பூ சூடியிருந்ததையும், நெற்றி வகிட்டில், மெரூன் நிறத்தில் குங்குமப் பொட்டு வைத்திருந்ததையும், அவரது முகம் நன்றாகப் பிரகாசித்தது என்பதையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
"ஆமா, டீச்சர் கிறிஸ்ட்டின் தானே.. பின்ன எப்புடி குங்குமம்லாம் வச்சிருக்காக ? ஒருவேள இன்டெர் ரிலீஜியஸ் மேரேஜோ ?"
"இல்ல பொம்மி. அவுக ரோமன் காத்தலிக். குங்குமம்லாம் வச்சிக்கிடுவாக"
"கல்யாணமானதும், அவுக ட்ரெஸ்ஸிங் ஸ்டெயிலே மாறிடுச்சில்ல. டயட்டான பிளவுசு, கோவிப்பொட்டு. முகத்துல ஒரு மாதிரி வெக்கம்.."
"ம்ம்ம்.. ஆமா, ஆமா. அவுக ஸ்டாப் ரூமுல இருக்குற எல்லா வாத்தியாருக்கும், பாக்ஸ் பாக்ஸா லட்டு கொண்டாந்து கொடுத்திருக்காகளாம்"
எனது நெருங்கிய தோழிகளும் அவர்கள் பங்குக்கு ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
எனக்கும், 'டீச்சரைப் பார்க்க வேண்டும்' என்று ஆசையாக இருந்தது. அந்தத் திருமணம் அவரிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் வித்தியாசங்களைக் காண வேண்டும் போலிருந்தது.
ஆனால், என் நேரமோ, என்னவோ !! அன்று முழுவதுமே டீச்சர் என் கண்ணில் படவில்லை. அன்றைய தினத்தில், எங்களுக்கு பாட்டனி வகுப்பே கிடையாது என்பதால், அவர் எங்கள் வகுப்பறைக்கு வரவும் வாய்ப்பு அமையவில்லை. ஆர்வம் கொஞ்சம் அதிகமானதால், மத்தியான வேளையில், ஸ்டாப் ரூமுக்குச் சென்று எட்டிப் பார்த்தேன்.
ஆனால், அங்கு டீச்சர் அவரது இருக்கையிலேயே இல்லை. பதிலுக்கு அவர் மேசையில் சில லட்டு டப்பாக்கள் மட்டும் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை டீச்சருக்கு அந்தத் திருமணத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடு என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. எனக்கு 'எப்படியாவது டீச்சர பாத்துட்டுப் போயிறணும்', என்ற எண்ணம் மேலிட்டது. கூடவே, "இந்த வயசுல இந்தக் கல்யாணம் தேவையா ?" என்ற கேள்வி மறுபடியும் என் மண்டையில் ஒழிக்க, என் மனம் அலைக்கழிக்கப்பட்டது.
அப்படியே அங்கிருந்து திரும்பி வகுப்பறைக்கு வந்து விட்டேன். மத்தியானம் முழுவதுமே, எனது கவனம் பாடங்களில் செல்லவில்லை. "இத்தனை வயசுக்கு மேலாக, டீச்சர் எதற்காகத் திருமணம் செய்து கொண்டார்கள் ?", என்ற கேள்வியும் என்னை விட்ட பாடில்லை.
இந்த இடத்தில, உங்களில் சிலருக்கு இப்படித் தோன்றலாம். "நீ ஏன் இப்படி மத்தவுக விஷயத்துல மூக்க நுழைக்கிற ? யாரு எந்த வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒனக்கென்ன ?"
அப்படித் தோன்றுபவர்களிடம் நானும் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.
"நீங்கள் யாருமே, உங்கள் வாழ்வில் ஒருமுறையேனும், வேறோருவருடைய தனிப்பட்ட விஷயம் எதிலாவது, தலையிட்டதே இல்லையா ? இல்லை வேறு யாருடைய வாழ்க்கையாவது விமர்சித்ததே இல்லையா ? பின் எப்படி, சினிமா கிசுகிசுக்களுக்கும், புறணி பேசும் நிகழ்ச்சிகளுக்கும் எல்லா காலங்களிலும் ஏக போக வரவேற்பு இருந்துகொண்டேயிருக்கிறது ?"
அந்த வகையில், நான் எவ்வளவோ மேல். இதுவரையிலும், நான் டீச்சரைப் பற்றி யாரிடமும் எந்தக் குறையும் சொன்னதேயில்லை. டீச்சரை விமர்சித்தோ, காயப்படுத்தியோ, குற்றம் சாட்டியோ, ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் செய்தது சரியென்றும் தவறென்றும் நீதி வழங்கவில்லை. அவருக்குத் திருமணம் தேவையென்றும், இல்லையென்றும் கருத்தும் சொல்லவில்லை.
தோராயமாகப் பலரும் திருமணம் செய்யும் வயதைக் கடந்து இதுவரைத் தனியாக வாழ்ந்து வந்த ஒருவர், இப்போது திருமணம் செய்கிறார் என்றால், அதற்கென்று ஒரு காரணம் இருந்திருக்கும் அல்லவா !! அந்தக் காரணத்தை தான் நான் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தேன்.
அதற்கு பதில் காணாமல், டீச்சரின் முகத்தில் என்னால் விழிக்க இயலாது என்பதிலும், அவரிடம் சகஜமாகப் பேச முடியாது என்பதிலும் கூட, உறுதியாக இருந்தேன்.
டிங்..டிங்..டிங்.. டிங்..
பள்ளியின் இறுதி மணி அடித்தது. அன்று திங்கட்கிழமையாதலால், மேத்ஸ் நோட்டை எடுத்துக்கொண்டு அந்த ஸ்டடிக்குத் தயாரானேன். அப்போது திடீரென்று, வகுப்பறையின் வாசலில் பச்சை நிற நிழலாடியது.
"ஸ்டூடெண்ட்ஸ், இன்னைக்கு உங்க மேத்ஸ் டீச்சருக்கு ஏதோ அவசர வேலையாம். அதனால நான் தான் உங்களுக்கு ஸ்டடி கவர் பண்ணப் போறேன். கமான், டேக் யுவர் பாட்டனி புக்ஸ் அவுட்"
சற்றும் எதிர்பாராத விதமாக எவாஞ்சலின் டீச்சரின் குரல். ஆச்சரியம் ஒருபுறமும், குறுகுறுப்பு மறுபுறமுமாக நான் நிமிர்ந்து பார்த்தேன். மாலை வெயில் பூசப்பட்டிருந்த அவரது முகம் ஒரு நொடி மட்டும் என் கண்களில் பதிய, உடனடியாகக் குனிந்து கண்களை மூடிக் கொண்டேன்.
"ஹேப்பி மாரீட் லைஃப் டீச்சர்"
மாணவர்கள் எல்லோரும் ஒருசேரச் சொன்னது, என் காதில் விழுந்தது. பொதிந்திருந்த விழித்திரையில், டீச்சரின் முகம் மீண்டும் மீண்டும், ஒரு நூறு முறையாவது தோன்றி மறைந்தது.
'அடடே !! பூரா பேரும் சொல்லுற மாதிரி, அவங்க முகத்துல எதுவும் பிரகாசமும்லாம் தென்படலையே !! களைப்போட அலுப்போட, கருவளையம் விழுந்த கண்ணோடல்லா இருக்காக !!'
'இந்த வயசுக்கு மேல, டீச்சர் எதுக்காகத் தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்களோ !!'
அடுத்த நாற்பது நிமிடங்களுக்கும், எனக்கு அதே நினைப்புத் தான்.
ஸ்டடி முடிந்தது.
மற்றவர்களெல்லாம் டீச்சரை வாழ்த்திவிட்டு, விடைபெற்ற போதும்கூட, நான் அவரிடம் எதுவுமே பேசவில்லை. என் மனதில் நின்ற கேள்விக்கு விடை காணாது, அவரிடம் பேச, என் மனம் என்னை அனுமதிக்கவில்லை.
தலைகுனிந்தபடியே, அவரைக் கடந்து நடந்தேன். பள்ளியிலிருந்து வெளியேறி, எதிரிலிருந்த பேருத்து நிறுத்தத்தில் வந்து நின்றுகொண்டேன். பொம்மியும் என்னோடு வந்து நின்றாள்.
வழக்கம்போல, டீச்சரும் வகுப்பறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார். தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்று சாவியை மாட்டினார். ஹேண்டுபேக்கை மாட்டிக்கொண்டு, காற்றில் அசைந்த தங்கத்தரளி மலர்களை விரலால் வருடிவிட்டு, பள்ளியிலிருந்து வெளியே வந்தார். இடப்புறமாகத் பத்து அடிகள் எடுத்து வைத்தார்.
அதே வேளையில், ஒரு இருசக்கர வாகனம் அவருக்கு முன்பாக வந்து நின்றது.
"நான் தான் வர்றேன்னு சொன்னேன்ல வாஞ்சி. அதுக்குள்ள கிளம்பிட்டியா ?"
வாகனத்தை ஓட்டி வந்த, நடுத்தர வயது மதிக்கத்தகுந்த அந்த நபர், டீச்சரின் ஹேண்டுபேக்கை வாங்கி, தனது வண்டியின் முன்பக்க ஹேண்டிலில் மாட்டிக்கொண்டார்.
"இவருதான் டீச்சரோட ஹஸ்பண்டு போல", பேருந்து நிறுத்தத்தில் என் பின்னால் நின்ற மாணவிகள் பேசிக் சிரித்துக் கொண்டார்கள்.
"இப்புடி உக்காரு"
டீச்சர், கொஞ்சம் தயங்கியபடியே அவரது பின்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
"வாஞ்சி, ரோடு குண்டும் குழியுமா இருக்கு. பெட்டர், நீ என் தோள் மேல கைய வச்சுக்கோ"
டீச்சரின் கை, இப்போது அவரது வலப்புறத் தோளைப் பிடித்துக்கொண்டது. அவளது முகத்தில் ஒரு பயம் கலந்த மகிழ்ச்சி பரவ ஆரம்பித்தது.
"ம்ம்ம். போலாங்க"
அந்த வண்டி நகர்ந்தது.
டீச்சர் வழக்கமாகத் தன்னந்தனியாய் நடந்து செல்லும், அந்த பங்களாத் தெருவுக்குள் அது நுழைந்தது. எப்போதுமே எல்லாக் கதவுகளுமே பூட்டப்பட்டு ஆளரவமற்றுத் தெரியும் அந்தத் தெருவில் - அன்று ஒரேயொரு கதவு மட்டும் திறந்து அவர்களை வேடிக்கை பார்த்தது. அவ்வேளையில், டீச்சரின் முகத்தில் அதுவரை தெரிந்த பயம் கலந்த மகிழ்ச்சி, பயத்தைக் கழற்றிவிட்டு வெறும் மகிழ்ச்சியாக மட்டும் அவள் முகம் முழுவதும் பிரவாகித்தது.
என்னவொரு ஆச்சரியம் !! எப்போதும் போல, அந்தத் தெரு - என்னனோடு பயத்தை ஏற்படுத்தவில்லை. தவிப்பைத் தந்துவிடவில்லை. தனிமையைத் திணிக்கவுமில்லை.
மாறாக.. அது,, அத்தனை நேரம் என் மனதை ஓயாது அரித்துக்கொண்டிருந்த கேள்விக்கான விடையைத் தந்து நின்றது. என் மனதும் தெளிந்து விட்டது.
ஆம்..
மனிதனென்ன மிருகமென்ன !! எத்தனை வயது ஆனால் தானென்ன !! தேவை அன்பு தானே !! அந்த அன்பைப் பெறுவதற்கென்று பல வழி வகைகள் இருந்தால், அதில் ஒரு வழி, ஒரு வகை திருமணமாக இருந்தால், எத்தனை வயதில் ஆனால் தான் என்ன !! திருமணம் திருமணம் தானே !!
பேருந்து வந்தது. நான் அதன் படிகளில் ஏறினேன்.
Comments
Post a Comment